பகுதி 5 – திருச்சதகம் 1
‘சதகம்’ என்றால் நூறு பாடல்களின் தொகுப்பு. இதில் பலவகைப் பாடல்கள் அந்தாதி வகையில் அமைந்துள்ளன. நூறு பாடல்களும் பத்து பிரிவுகளாக


‘சதகம்’ என்றால் நூறு பாடல்களின் தொகுப்பு. இதில் பலவகைப் பாடல்கள் அந்தாதி வகையில் அமைந்துள்ளன. நூறு பாடல்களும் பத்து பிரிவுகளாக
வழங்கப்பட்டுள்ளன.
முதலாவதாக, மெய்யுணர்தல்.
பொய்யை விலக்கி, சிவமாகிய உண்மையை உணர்ந்துகொள்ளுதல்
பாடலின்பம்
மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து உன் விரை ஆர் கழற்கு என்
கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்
பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சய சய போற்றி என்னும்
கைதான் நெகிழவிடேன், உடையாய், என்னைக் கண்டுகொள்ளே!
*
முழுவதும் கண்டவனைப் படைத்தான் முடி சாய்த்து முன்னாள்
செழுமலர் கொண்டு எங்கும் தேட அப்பாலன், இப்பால் எம்பிரான்,
கழுதொடு காட்டுஇடை நாடகம் ஆடிக் கதிஇலியாய்
உழுவையின் தோல் உடுத்து உன்மத்தம் மேல்கொண்டு உழிதருமே!
பொருளின்பம்
இறைவா,
உன்னை எண்ணி என் உடல் சிலிர்க்க, நடுங்க, நறுமணம் நிறைந்த உன் திருவடிகளை எண்ணி என்னுடைய கைகளைத் தலைக்கு மேலே வைக்கிறேன்,
கண்ணில் நீர் ததும்புகிறது, உள்ளம் வெதும்புகிறது,
பொய்களையெல்லாம் விலக்கி, உண்மையான உன்னை வணங்குகிறேன், உன் வெற்றியைப் பாடுகிறேன், இந்த நிலையிலிருந்து நான் என்றும் மாறமாட்டேன்,
என்னை உடைமையாகக் கொண்டவனே, என்னைக் கண்டுகொள், உன் அன்பர்களில் ஒருவனாக என்னையும் ஏற்றுக்கொள்!
எல்லா உலகங்களையும் படைத்தவன் பிரம்மன், அவனைப் படைத்தவன் திருமால்,
முன்பு ஒருநாள் அவர்கள் இருவரும் தலை தாழ்த்தி, கையில் செழுமலர்களுடன் உன்னை எல்லா இடங்களிலும் தேடினார்கள், நீ அவர்களுக்கு அகப்படவில்லை.
ஆனால் இங்கே, நீ எங்கள் தலைவனாகத் திகழ்கிறாய், காட்டில் பேய்களோடு கூத்தாடுகிறாய், ஏதுமறியாதவனைப்போல் புலித்தோலை இடையில்
உடுத்திக்கொண்டு பித்தனைப்போல் எங்கும் திரிகிறாய், இது என்ன திருவிளையாடல்!
சொல்லின்பம்
மெய்: உடல்
விதிர்விதிர்த்து: நடுங்கி
விரை: நறுமணம்
கழல்: கழல் அணிந்த திருவடி
உடையாய்: உரிமையாகக் கொண்டவனே
அப்பாலன்: அப்பால் நின்றவன்
இப்பால்: இங்கே
கழுது: பேய்
நாடகம்: நடனம்
உழுவை: புலி
உன்மத்தம்: பித்தம்
உழிதருதல்: திரிதல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...